Visitors

18 February 2011

புலன் வெறுத்தல்!

புலன் வெறுத்தல்
---------------
நாவு.
======
உண்நாக்கு சுவையறியா தன்மைபோல் எழுசுவையும்
உண்ணுவதே தொழிலாகக் கொண்டதலால்-- கண்ணாளா!
காவலனே ராமக்ருஷ்ணா! உன்நாம மதன்சுவையை
நாவறியா தென்னே இது?

கண்
====
காசுக்கும் உதவாத காட்சியையும் கணிகையரின்
வீசுவிழி கண்டுள்ளம் களிப்பதலால்-- தேசுநிறை
விண்ணவனே ராமக்ருஷ்ணா! உனைக்காணும் அதன்சுவையைக்
கண்ணறியா தென்னே இது?

செவி.
======
அரட்டையினைக் கேட்பதற்கு ஆர்வமிகக் கொண்டு
புரட்டுரைக்கு பேதலிப்ப தல்லா(து)-- இரட்சகனே
நவின்றிடுவோர் பிறப்பறுக்கும் ராமக்ருஷ்ண நாமம்
செவியறியா தென்னே இது?
நாசி.
======
தேகத்தின் மேற்பூசும் தைலமதும் தையலரின்
மேகத்தை நிகர்கூந்தல் முகர்தலாந்- ஏகனே
பூக்கொடுனை பூசித்து ராமக்ருஷ்ணா! தூபமணம்
மூக்கறியா தென்னே இது?
மெய்
====
வெய்யில் மிகப்பட்டால் நிழல்நாடிப் பொய்யின்ப
மொய்குழலாள் மேனிசுகம் கொள்வதலால்-- மெய்ய உன்
னிடமன்பு மிகக்கொண்டு ராமக்ருஷ்ணா வென உருக
உடலறியா தென்னே இது?

நெஞ்சம்.
========
விடயங்கள் பற்பலவும் வேட்பதுவும் அவற்றோடு
படையென்ன போர்புரிவ தல்லாமல்-- உடையவனே
கஞ்சமலர் இதயத்தில் ராமக்ருஷ்ணா உனைவைக்க
னெஞ்சறியா தென்னே இது?

3 July 2010

கனவு மயம் !

காரிருள் காணும் கனவே--இன்பக்
...காலை நேரம்;--என்றன்
ஆருயிர் காணும் கனவே--இந்த
...அழகிய தேகம்.

வாரிதி காணும் கனவே--பொங்கி
...வழியும் அலைகள்;--இந்தப்
பாரிடம் காணும் கனவே--விண்ணைப்
...பறிக்கும் மலைகள்.

வானகம் காணும் கனவே--பஞ்சாய்
...வளரும் மேகம்;--அடர்
கானகம் காணும் கனவே--குயில்கள்
...வளர்க்கும் ராகம்.

செங்கதிர் காணும் கனவே--மேலைத்
...திசையின் ஜாலம்;--வெண்
திங்களின் கனவே மின்மினிக்--கூட்டம்
...திகழும் நீலம்.

வண்ண மலர்காண் கனவே--பறக்கும்
...வண்ணத்துப் பூச்சி;--ஒரு
சின்னக் குழந்தையின் கனவே--ஆடும்
...சிறுமரப் பாச்சி.

ஆடிச் செல்லும் நதியின் கனவே--தேங்கும்
...அணையின் தேக்கம்;--முடிவை
நாடிச் செல்லும் நம்மின் கனவே--இடையே
...நடுநடுத் தூக்கம்.

வானும் மண்ணும் பிறவும்--இறைவன்
...வளர்க்கும் கனவு;--நாம்
பேணும் இச்சிறு வாழ்வே--இறைவன்
...பிதற்றும் கனவு.

4 June 2010

கூறின் ஆறே சமுசாரம்
...கூடும் அக்கரை யதுபிரம்மம்
வேறென் றிக்கரை இருந்தந்த
...வெம்மா யைநதிக் கடந்திடுமத்
தீரன் அவனே ஜீவாத்மா;
...தோன்றும் வழிகள் நாலாகும்
நீரின்மேல் நடப்பது யோகம்
...நீந்திக் கடப்பது கருமமதாம்
யாரின் உதவியும் வேண்டாம்
...எகிறித் தாண்டல் ஞானமெனில்
பாரின் மக்கள் பலர்செல்லும்
...பாலம் ஆகும் பக்தியதே!

(7- 5- 67.)


கருத்து.
-----------
ஆறு=சம்சாரம்
அக்கரை=பரப்பிரம்மம்
கடப்பவன்=ஜீவாத்துமா

நீரில் நடந்து கடப்பது=யோகநெறி
நீந்திக் கடப்பது=கரும நெறி
தாண்டிக் கடப்பது=ஞானநெறி
பாலத்தின் மூலம் கடப்பது=பக்தி நெறி.

3 June 2010

கதாதர அகவல்!

பொய்யாம் ஜகமாயைப் போயொழிய உன்னருளை
செய்யாயோ செய்குவையோ செப்பாய் கதாதரனே!

சாருயிர்க்கு பொருளுக்கு சரீரத்திற் கேங்காமல்
ஆருயிர்க்கும் நானேங்க அருளாய் கதாதரனே!

வீர விவேகா நந்தன் விரும்பும் பொற்பாதத்தை
சேர அணைத்திடு மந்த சுகம்தா கதாதரனே!

விட்டென்றன் உயிர்ப்பிரிந்து வீணாகப் போகுமுன்னுன்
பட்டான மேனியென் கண்படுமோ கதாதரனே!

ஒன்றொன் றொன்றொன்றொன்றென உள்ளபுல .னைந்தாலே
கொன்றென்னை வாட்டுவதுன் குறிப்போ கதாதரனே!

தேனுன்னும் வண்டாக தேவாஉன் பாதமலர்த்
தானெண்ணிச் சிந்தை களித்திடுமோ கதாதரனே!

முட்டாள் என்பிழைஎண்ணி முனிந்தேநீ என்கையை
விட்டால்நான் என்னசெய்வேன் வேண்டாம் கதாதரனே!

அத்துவித ஞானரசம் அன்னைஅருள் பானரசம்
நித்தம் அருந்திய உனக்கு நேர்யார் கதாதரனே!

தஞ்சம் அடைந்தவரை தடுத்தா ளுவாயென்று
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன் நேசா கதாதரனே!

(கதாதர அகவல் நிறைவுற்றது!)

31 May 2010

கதாதர அகவல்

உண்டின்பம் எனவேநான் ஓடிக் களைத்தேனுன்
தொண்டின்பம் காணவருள் துரையே கதாதரனே!

பொய்யாக உன்பக்தன் போல நடித்தேனே
மெய்த்தொண்டன் ஆகஎனை மாற்றாய் கதாதரனே!

யந்திரிநீ!உன்கையில் யந்திரம்நான் என இருக்க
தந்திரம்நீ ஒன்றுசொல்லாய் தயவாய் கதாதரனே!

என்ன துன்பம் உற்றாலும் அல்லதின்பம் உற்றாலும்
உன்னை மறவா திருக்குமுளம்தா கதாதரனே!

ஒருத்திக்கு ஒருகணவன் ஒன்பது பேருண்டோஎன்
கருத்தினிலே கற்பருளென் கணவா கதாதரனே!

29 May 2010

கதாதர அகவல்.

ஸ்ரிராம கிருஷ்ணாஎன் சிந்தைமிக நைந்தேன்
பாராமல் இருப்பதுவும் பண்போ கதாதரனே!

அன்னைசாரதா தேவி அன்புமண வாளாயிங்
கென்னை உன்னருள் செய்தேற்பாய் கதாதரனே!

பரமஹம்ஸ தேவவுனை பார்த்திடவே ஆசையடா!
வரமறுத்தால் என்செய்வேன் வாவா கதாதரனே!

சித்தி யெட்டும் பெற்றாலும் செல்வமெல்லாம் உற்றாலும்
பத்தியுன்மேல் இல்லாக்கால் பயனென் கதாதரனே!

இருமையிலா அத்துவிதம் எனக்கேதற்கு உன்றனெழில்
உருவாய்க் கண்டின்பமுற வேண்டும் கதாதரனே!

பெண்ணுருவைக் கண்டவுடன் பின்னோடும் என்மனமே
உன்னுருவின் பின்னோடும் இனிமேல் கதாதரனே!

சங்கரனோ சதுர்முகனோ சங்குசக்ர தாரியோயிங்
கெங்களை ஏமாற்றியநீ யாரோ கதாதரனே!

வண்டாடும் உன்றனிரு வண்ணமலர்த் தாளிணையைக்
கொண்டாடி மகிழ்வேனே கோனே கதாதரனே!

ஏழ்பிறப்பும் ஏழையருக் கேவல்செய வேண்டியுன்றன்
தாழ்சடையில் அவர் இல்லைத் துடைத்தாய் கதாதரனே!

உன்னாமம் அருந்தி உற்றபவ நோயகற்ற
எண்ணாமல் இருந்தழியும் எனையாள் கதாதரனே!

27 May 2010

கண்ணா!குழல் ஊது!


கோபியர்க் கருள குழலெடுத் துமிக
சோபிதம் கொளும் கீதம் ஊதினாய்!
மாபிழைப் புரியெமக்(கு) இன்றருள
நீபிடித்து குழல் ஊது கண்ணனே!...1

இன்பமேற் படும் இசையிலா யினும்
துன்பமாம் பிறவி தன்னைநீக் கிபே
ரின்பமேற் படும் இசைஉன தன்றோ?
அன்பனே! ஊது ஆயர்கண் ணனே!....2

கண்ணதே உயர் கரணமாம் என
எண்ணிடல் பிழை என்றுணர்கிறேன்
பண்ணிசைக் குழல் பருகும்செவி களே
முன்னதற் கும்மே லானதே கண்ணா!....3

பாலையில் கண்ட பருகும்நீரைப் போல்
வேலைசூழ் உலக வேதனை விடாய்
கோலகீத முன் குழலிசைத் திடும்
வேளைதீரு மே வேணுகோபா லனே!...4

பெண்ணினாசை யால் பேதலிப் பவர்
மண்ணினாசை யால் மதிமயங் குவோர்
பொன்னினாசை யால் புலம்பு வோ ரல்லால்
அண்ணலே!உன் பால் ஆசைக்கொள் கிலார்?....5

24 May 2010

அருள் தருவாய் பரமஹம்சா!

பஞ்சின் காயை பழமென நினைந்த அஞ்சுக மாவேனோ?
தஞ்சம் தருமுன் தாளினை அடையும் தகைமை யுறுவேனோ?

முன்னே புரிந்த மூவினைக் காளாய் மோசம் போவேனோ?
தென்னீச் வரத்து தேவா! உன்றன் திருவடி சேர்வேனோ?

காம காஞ்சனம் எனுமிரு கயிற்றால் கட்டுண் டிடுவேனோ?
ராம கிருஷ்ணா எனும்நாமம் கேட்டேன் ரோமஞ் சிலிர்ப்பேனோ?

மாரன் தம்பால் மனமே கலங்கி மதிகெட் டலைவேனோ?
வீர நரேந்திர நாதன் தொழுமுன் பாதம்பார்ப்பேனோ?

பொன்னால் பெண்ணால் மண்ணா லென்மனம் புண்ணா கிடுவேனோ?
அன்னை சாரதா பதியே! உனைக்கண் முன்னால் காண்பேனோ?

மரணம் ஜனனம் ஜனன மரணமெனும் மாயைப் போறுமையா!
சரணம் அடைந்தேன் சரணா கதியருள் சற்குரு பரமஹம்சா!

15 May 2010

பாவையர்க் குலத்தைப் போற்றும் பதம்!
...பணத்தை கணமும் நினையாத பதம்!
சேவைசெய் துயரச் சொன்ன பதம்!
...செம்மலாம் ராமகிருஷ்ண பதம்!....18

காம கோப யமகால பதம்!
...காசைப் பரிசிக்கக் கூசும் பதம்!
நாமச் சேவையில் தேமதுரப் பதம்!
...நாயகன் ராமகிருஷ்ண பதம்!....19

அவதரித்து ஆளான பதம்!
...அஞ்சலென் றபயம் அளிக்கும் பதம்!
தவம் புரிந்து தன்னை அளித்த பதம்!
...தத்துவன் ராமகிருஷ்ண பதம்!....20

29 April 2010

சந்த்ர மணி மன மினிக்கும் பதம்!
...சாரதா தேவி சார்ந்த பதம்!
மந்த்ர வாக்கிய மளிக்கும் பதம்!
...மருவிலான் ராமகிருஷ்ண பதம்!....16

லாட்டு விற்கும் அருளூட்டும் பதம்!
...லட்சம் நூறு பிழை பொறுக்கும் பதம்!
வாட்டு பல துன்பம் ஏற்ற பதம்!
...வள்ளலாம் ராம கிருஷ்ண பதம்!....17

20 April 2010

விவேகா னந்தன் விரும்பும் பதம்!
...பஞ்ச வடியில் வளர்கஞ்ச பதம்!
நிவேதன மேற்கும் நிமல பதம்!
...நித்தியன் ராம கிருஷ்ண பதம்!....14

பட்ட உடனே பரங் காட்டும் பதம்!
...பாப நாசன பவித்ர பதம்!
தொட்ட வுடனே துயரோட்டும் பதம்!
...தூயனாம் ராமகிருஷ்ண பதம்!....15

19 April 2010

பாடிப் பரவசமாய் ஆடும் பதம் !
...பயிலும் கீதமதில் லயிக்கும் பதம்!
நாடித் துதிப்ப வர்க்கு நல்கும் பதம்!
...நரதேவன் ராமகிருஷ்ண பதம்!.... 12

பன்னீ ராண்டு தவம் பலசெய் பதம்!
...பஞ்ச வடியில் வளர் கஞ்ச பதம்!
எண்ணிலாத் துயர முற்ற பதம்!
...எம்பிரான் ராமகிருஷ்ண பதம்!....13


16 April 2010

அத்து விதத்தில் அமிழ்ந்த பதம்!
...அனுபவ அறிவினில் அமைந்த பதம்!
சத்திய நித்திய சுத்த பதம்!
....சத்துவன் ராமகிருஷ்ண பதம்!....10

பவதா ரிணிமகிழ் பதும பதம்!
...பைரவி துதிமிக செய்த பதம்!
சிவ மாகிய பவநாச பதம்!
...சித்தனாம் ராம கிருஷ்ண பதம்!....11

10 April 2010

காம காஞ்சனம் கடிந்தபதம்!
...கல்லில் காளியினைக் கண்டபதம்!
சாம மாதி மறை சாற்றும் பதம்!
...சற்குரு ராமகிருஷ்ண பதம்!....8.

அபிராமி பதம் அணைந்த பதம்!
...அரிஹர .னாதியை அறியும் பதம்!
நபிஏ சுவையும் நாடும் பதம்!
...நற்றவன் ராமகிருஷ்ண பதம்!....9.

4 April 2010

துன்ப மெலாம் தொலைத் தோட்டும் பதம்!
...துட்டருக்கும் துணை செய்யும் பதம்!
இன்ப மெலாம் இசைந்தளிக்கும் பதம்!
...இறைவனாம் ராம கிருஷ்ண பதம்!....6.

தட்சி நேஸ்வரத்தில் தழைத்த பதம்!
...தருமப் பயிரை வளர்த் திட்ட பதம்!
இச்சை யென்னும் இடரொழிக்கும் பதம்!
...ஈசனாம் ராம கிருஷ்ண பதம்!....7.

1 April 2010

தீர நரேன் தொழு தேத்தும் பதம்!
...திருவருள் தருமிரு அருமை பதம்!
பார வினையை பஞ்சாக்கும் பதம்!
...பற்றிலான் ராம கிருஷ்ண பதம்!....4.

ராக்கால் சந்திரன் ரமிக்கும் பதம்!
...ரவியென ஒளிதரு பரம பதம்!
வாக்கால் சொல்ல வொணாத பதம்!
...வரதனாம் ராம கிருஷ்ண பதம்!....5.

31 March 2010

ராமகிருஷ்ண பதம்!

ராமகிருஷ்ண பதம்!

படித்தவ ரெல்லாம் பணியும் பதம்!
...பாமர ரெல்லாம் போற்றும் பதம்!
இடித்துரைத் தவரும் ஏற்கும் பதம்!
...எந்தையாம் ராம கிருஷ்ண பதம்!...1.

அன்னை சாரதா அணியும் பதம்!
...அழகு மிளிரர விந்த பதம்!
பொன்னை பெண்ணைபொய் யாக்கும் பதம்!
...புனிதனாம் ராம கிருஷ்ண பதம்!....2.

சசிநிதம் பணிந்துளம் கசியும் பதம்!
...சத்சித் சுகமதை சேர்க்கும் பதம்!
பசித்த வர்க்கமுதென ருசிக்கும் பதம்!
...பரமனாம் ராம கிருஷ்ண பதம்!....3.

26 March 2010

தங்கிய உலகில் தனைமறந்தே
...தறிகெட் டலைந்தே துன்புற்றே
பொங்கிய உளத்தோ டுனைமிகவும்
...போற்றியுன் அருளினை வேண்டுகிறேன்
தொங்கிய தீங்கனி கள்நிறையும்
...தருசூழ் பேலூர்த் தலத்துறைவோய்!
சங்கையெ னும்பகை யைத்துளைக்கும்
...சரமே! சற்குரு ராமகிருஷ்ணா!....81.

காரணம் ஏதும் இன்றி
...கருணைசெய் வோனே போற்றி!
சாரதை யன்னை போற்றும்
...சற்குரு நாதா போற்றி!
பாரெலாம் வாழ வந்த
...பரமஹம் ஸனே போற்றி!
பேரருள் ராம கிருஷ்ண
...பொற்பதம் போற்றி! போற்றி!!....82.

எனக்குத் தெரிந்தச் சொற்கொண்டு
...ஏதோ செய்தேன் கவியென்று
உனக்குத் தொடுத்தப் பாமாலை
...எனவே அளித்தேன் இதில ழகும்
மணக்கும் தன்மை இலையெனினும்
...மனத்திற் கொள்ளா தேற்றிடுவாய்!
தனக்குத் துன்பம் கொடுப்போர்க்கும்
...தஞ்சம் கொடுக்கும் ராமகிருஷ்ணா!....83.

24 March 2010

காமார்ப் பதியின் கனியேவா!
...கன்னியர் மயங்கும் கண்ணாவா!
மாமா யங்கள் புரிந்தோய்வா!
...மாசொன் றில்லா மணியேவா!
தூமா மலரின் பாதாவா!
...தூய அன்னைத் துணைவாவா!
ஏமாற் றாமல் என்முன்னே
...இன்றே வாவா ராமகிருஷ்ணா!....79.

ஈங்கார் எனைப்போல் பாவியர்கள்
...இறைவா உன்றன் அருள்வேண்டி
ஏங்கார் எல்லாம் இழிகுலத்தோர்!
...என்றே கேட்டும் இசையாஎன்
தீங்கார் உள்ளம் திருந்திடவும்
...திரும்பும் பிறவி யொழிந்திடவும்
ஓங்கா ரத்தின் உட்பொருளே!
...ஒருசிறி தருள்வாய்! ராமகிருஷ்ணா!....80.

22 March 2010

விடையின் மேலமர் வித்தகனாம்!
...விடம்கொள் கண்ட சிவன்நீயோ?
தடையில் கருணைச் செய்பவனாம்
...திருவை மார்பில் கொள்மாலோ?
குடைந்தே அவனுந் தியில்பிறந்த
...குயவன் எனும்பிரம் மாதானோ?
விடையில் மருமம் ஆனவனே!
...விள்ளாய் நீயார்? ராமகிருஷ்ணா!....77.

நீசன் நின்னடி யான்போன்று
...நடிக்கும் கசடன் நின்னடிக்குத்
தாஸன் போன்றும் நடித்துன்மேல்
...துதிகள் பாடி ஆடிமிக
நேசன் போன்றும் நடிக்குமென்றன்
...நடிப்பை யெல்லாம் நிஜமாக்கு!
ஈசன் எனினும் ஏழையென
...இங்கே நடிக்கும் ராமகிருஷ்ணா!....78.

19 March 2010

நகமும் சிகையும் அகலுவதால்
...நானுறு துன்ப மொன்றுமிலை
முகமும் உடலும் சேர்தேகம்
...முடிந்தே அழியும் நாள்மட்டும்
அகமும் உயிரும் குலைகின்றார்
...அதிசயம் இதுவாம் சத்சித்து
சுகமும் ஆனாய் உனைப்பணிந்தேன்
...சோர்வொழிப் பாயே ராமகிருஷ்ணா!....75.

உள்ளத் துறைவோன் நீயானால்
...உணரும் படிவா ராததுஏன்?
உள்ளத் தோன்றா பிரமமென்றால்
...உடலைத் தாங்கி வந்ததுமேன்?
உள்ளப் பொருளே! அருளமுதே!
...உரைக்கும் கடந்த உன்னதனே!
உள்ளன் இலனெனும் பான்மைகொள்
...உலகின் முதல்வா! ராமகிருஷ்ணா!....76.

17 March 2010

நோவைக் காணா உடலைத்தா!
...நோன்பை நோற்கும் திறனைத்தா!
பாவை உன்மேல் பலநூறு
...படைக்கும் பாண்டித் தியமும்தா!
சாவை அஞ்சாத் தகைமைத்தா!
...சற்குரு நாதா மலர்ப்பாதா!
நீவைத் திடுதா வினில்மகிழும்
...நினைவைத் தாராய் ராமக்ருஷ்ணா!....73.

அன்புற் றோர்க்கே அருகோனே!
...அசடர்க் கெல்லாம் அரியோனே!
துன்புற் றோர்க்குத் துணைவோனே!
...துயில்வோர்க் கெல்லாம் துலைவோனே!
நண்புற் றோரை நயப்போனே!
...நாடா தாரை நசிப்போனே!
என்புற் றேலெனும் உடலெடுத்த
...எளியோ னேயென் ராமகிருஷ்ண!....74.

15 March 2010

நக்கும் எலும்பின் சுவையறியும்
...நாய்க்கும் நகையே தோன்றிடவே
மக்கும் மறையும் வாழ்வினிடை
...மறையாப் பொருளைத் தேடுகிறேன்
கொக்கும் பிடிபடும் தலைவெண்ணெய்
...குழைந்தால் என்றிடும் மூடன்யான்
மிக்கும் புகழுடை பேலூரின்
...மிசைவாழ் வோனே ராமகிருஷ்ணா!....71.

சேவைச் செய்யும் இதயம்தா!
...சேரும் அன்பும் அறிவும்தா!
பாவை யரைஎல் லாம்மாதா
...பரதே வியெனும் பான்மைத்தா!
நாவைக் கண்ணைச் செவிமெய்யை
...நாசியை வென்றிடும் தீரம்தா!
பூவைக் கொண்டுனை பூசிக்கும்
...பேரைத் தாராய் ராமகிருஷ்ணா!....72.

13 March 2010

பரமஹம்ஸ மூர்த்தி!

பல்லவி.
-------
ஆதி அந்தமிலா ஆனந்த மூர்த்தியே! ஸா
மாதிவேத மூர்த்தியே! ராமகிருஷ்ணமூர்த்தியே!(ஆதி)

அனுபல்லவி.
----------
நாதியற்ற வர்க்கருள் நற்கருணா மூர்த்தியே!
நரேந்திர உற்சவர்க்கு நல்லமூல மூர்த்தியே!(ஆதி)

சரணம்.
-------
கீர்த்தியுடைய உனை கெஞ்சி இறைஞ்ச இஷ்ட
பூர்த்தியடைவராம் புண்ணிய மூர்த்தியே!

பார்த்திங்கெனக்கும் அருள் பரமஹம்ஸமூர்த்தியே!
தீர்த்தங்களில் உயர்ந்த தக்ஷிணேஸ்வரம் வாழும்(ஆதி)

------------------------------------------

12 March 2010

குருமஹராஜா!

குருமஹராஜா!
---------------

பல்லவி.
------
குருமஹராஜா குருமஹராஜா
திருவருள் புரியும் கருணா சாகர (குரு)

அனுபல்லவி.
----------
மருவில் அன்னை சாரதை மனம்மகிழ் நாதா
மனித வடிவில் வந்த மறை த்தேடும் பாதா (குரு)

சரணம்.1.
-------
துன்பமும் இன்பமும் இங்கெனை வாட்டுதே
..இருவினைப் பயன்கள் இவ்விகத்தினில் கூட்டுதே
அன்பனே உன்நினைவு ஆனந்தம் ஊட்டுதே
..அற்பனுக் குன்னருள் உண்டெனக் காட்டுதே! (குரு)
சரணம்.2.
----------
சங்கு சக்கரமின்றி சாதாரணமாய் வந்தாய்
..சகல உயிர்க்கும் அன்பே செய்யமிக உவந்தாய்
மங்கும் தருமம் ஓங்க இங்குபிறந்த எந்தாய்!
..மைந்தன் நரேந்திரனை இம்மண்ணுலகிற்குத் தந்தாய்! (குரு)

*****************************

8 March 2010

அணிமா மணிமா எனக்கூறும்
...அட்ட சித்திகள் பெற்றாலும்;
பணிமா தர்களும் பொற்குவையும்
...பேரும் புகழும் பெற்றுமொளிர்
மணிமா லைப்பல புனைந்தாலும்
...மரணம் கொள்ளும் உடற்பிறப்பைத்
துணிமா சக்தி உந்நாமம்
...துதிப்போர்க் கேயாம் ராமக்ருஷ்ணா!....69.

கண்டம் புண்ணா கியதாலோ
...கழலும் வேத விழுப்பொருளைக்
கண்டம் டாமென முழங்கலென
...கருச்சனை செய்யோர் சிங்கமென
கண்டம் ஏழும் கேட்கவிவே
...கானந்தன் வாயாய் நீபகர்ந்தாய்?
கண்டம் மாமுனி யைக்கொணர
...குழந்தை யாகினை ராமகிருஷ்ணா!....70


கண்டம்=தொண்டை
கண்டம்=மணி
கண்டம்=தேசங்கள்
கண்டு+அம்

6 March 2010

பாடியும் ஆடியும் பதறியுடல்
...பாகாய் உருகுவைச் சிலபோதில்
கூடிடும் பிரம ஞானத்தில்
...கிடப்பாய் மூழ்கி சிலபோதில்
நாடிடும் பக்தர் நற்றவத்து
...ஞானியர் இவரிரு வரும்சேரா
கோடிய ரெனுமதைப் பொய்செய்தாய்
...குருமஹ ராஜா ராமகிருஷ்ணா!....67.

கோடியர்=extreme

வாளைத் தாவும் வயல்சூழும்
...வானோர் புகழ்கா மார்ப்பதியில்
நாளைத் தாவச் செய்கதிரோன்
...நேரும் படியவ தரித்தவனே!
வாளைத் தாவி எடுக்கையிலே
...வடிவோ டன்னையைக் கண்டவனே!
தாளைத் தாவிப் பற்றுமெனைத்
...தள்ளா தேஸ்ரீ ராமகிருஷ்ணா!....68.

4 March 2010

கடியா ரத்தைப் போல்தினமும்
...கணக்காய்ச் சுழலும் வாழ்நாளில்
படியா பாடம் பலகற்றேன்
...பதரைப் போன்றோர்; பரமெண்ணித்
துடியா மாக்கள் துணையன்றி
...தூயா உன்னைத் துதிபாடும்
அடியா ரிணக்கம் அதுஅருள்வாய்!
...அம்மே! அப்பா! ராமக்ருஷ்ணா!....65.

வசிக்கும் வீட்டை காத்திடும் ஓர்
...வாயுண விற்கும் நாய்; உட்கொள்
மசிக்கும் எழுதும் வரைகோலும்;
...மதியமும் இரவும் வயிறார
புசிக்கும் உணவிற் கீடாக
...புவிக்கென் செய்தேன் ஈடாக?
சசிக்கும் கங்கா விற்கும்தலை
...சடையில் இடந்தரும் ராமக்ருஷ்ணா!....66.

2 March 2010

சந்திர மணியின் பாலநமோ
...சாரதா பிரிய நாதநமோ
தந்திரப் ப்ராம்மணி அத்வைத
...தோதா புரியின் சீஷநமோ
அந்தரி காளியின் அன்பநமோ
...அனேக தர்மத்(து) துருவநமோ
மந்திர மருளும் லோககுரு
...மஹராஜ நமோ ராமக்ருஷ்ணா!....63.

குமரன் நர இந் திரநாதன்
...குழந்தை ராக்கால், பூரணனும்
அமரன் யோகீந் திரனவனும்
...அதிசூ ரநிரஞ் சனன்பாபு
தமரென் நுமிந்த அறுவருடன்
...தரணியின் மேலே வந்தவனே!
நமரென் னுனடி யாருடன்யான்
...நயக்கும் நாளெது? ராமக்ருஷ்ணா!....64.
...

26 February 2010

தூய அன்னைத் துணைவா வா
...தோன்றித் தோன்றா ஒன்றே வா
நேயம் காட்டும் நண்பா வா
...நிலையில் உலகின் நிலையே வா
மாயப் பிணிக்கோர் மருந்தே வா
...மருந்தைக் குழைக்கும் தேனே வா
நாயே னுக்கெஜ மானே வா
...நயப்போர்க் கருளும் ராமக்ருஷ்ணா!....61.

தாகம் தவிர்க்கும் தலைவா வா
...தனியே னெனக்குத் துணையே வா
சோகம் தவிர்க்கும் சுகமே வா
...சூதை யொழிக்கும் சுகிர்தா வா
போகம் கொடுக்கும் புனிதா வா
...பிறப்பை யறுக்கும் பெயரா வா
தேகம் கொண்டே தோன்றிட வா
...தேவா வாவா! ராமக்ருஷ்ணா!....62.

24 February 2010

மூவகை அடியார்

படுத்திருந்தாள் ரபியாளும் நோயால்வாடி
...பார்த்துசெல அவளருகில் இருவர்வந்தார்
அடுத்தமுசல் மான்கள்புகழ் புனிதமாலிக்
...அறிவாளர் ஹாஸனென்ப தவர்கள் பேராம்.

"இறையவனார் தருந்துன்பம் எதுவா.னாலும்
...ஏற்றுமனம் பொறுத்தநலம் "என்றார்ஹாஸன்
"பொறையதிலும் அழகாகும் அடியாரென்றால்
...புன்மைகண்டும் புன்னகைத்தல்" என்றார்மாலிக்.

பின்னவரின் பக்தியிலும் அகந்தைக்கண்டு
...பெண்ரபியாள் "பெரியோரே! நீங்கள்சொன்ன
அன்னவர்க்கும் மேலானோர் அவனைக்கண்டு
...அடைந்ததுயர் மறந்துநிற்கும் அடியார்"என்றாள்.

19 February 2010

"மதங்கள் எத்தனை மார்க்கம் அத்தனை"-- ராமகிருஷ்ணர்.

"சோத்துக் கவலை தீராமல் சொர்க்கக் கவலை வாராது."--விவேகானந்தர்.

"if the BHDDHA is the evolved amoeba
the amoeba was the involved BUDDHA also"--- VIVEKANANDHA.

"முதிர்ந்த புழுவே புத்தன் எனில்
முதிரா புத்தன் புழுவாகும்"

சிவாம்ருதம்.
18-1-69

"A cloud of clay desires to be a flower;
A flower, to reach a star;
A star, to flame the soul of man;
A man, to turn Creator;
But the dream of GOD is to become a clod"
-- R.K.DALAL.

"விருப்பச் சுழல்'
----------------
மண்ணாங்கட்டி விரும்பியது
..மனக்கும் மலராய் இதழ்விரிக்க
மணக்கும் மலரோ விரும்பியது
...வானில் மீனாய்க் கண்சிமிட்ட
வானின் மீனும் விரும்பியது
...மனிதனுள் ஆன்மத் தீயாக
மனிதனின் ஆன்மா விரும்பியது
...பரமாத்மாவாய் பரிமளிக்க
பரமாத்மாவின் விருப்பமதோ
...மறுபடி ஒருபிடி மண்ணாக!

சிவாம்ருதம்,
26.7.69.

18 February 2010

நிலவு சுந்தரி நடந்தாள்...

நிலவு சுந்தரி நடந்தாள்...

ஜோதி நிலவு சுந்தரி--வான்
வீதியில் நடந்தாள்-- என்னிடம்
பாதி உயிரைப் பறித்துக் கொண்டு
பாவை நடந்தாள்.

மேகக் காட்டில் மறைந்து மறைந்து
மெல்ல நடந்தாள்-- உளம்
வேகும் என்னை தனியில் விட்டு
விண்ணில் நடந்தாள்.

இருண்ட வானில் துணையின்றி--மார்பு
இரைக்க நடந்தாள்--பயந்து
வெருண்ட மானைப் போல திகைத்து
வெண்மதி நடந்தாள்.

ஜொலிக்கும் விண்மீன் தோட்டத்தின் வழி
சோகமாய் நடந்தாள்-- காதல்
களிப்பைத் துறந்து ககனவெளியில்
கலைமதி நடந்தாள்.

தந்தை சூர்யன் தகிப்பை அஞ்சி
தண்மதி நடந்தாள்-பிறர்
நிந்தைக் காக பயந்து--என்னை
நீங்கி நடந்தாள்.

திரும்பி திரும்பிப் பார்த்து-- சந்திர
தேவி நடந்தாள்--தேன்
சுரும்பு மொய்க்கும் மலர்முகம்--கதை
சொல்ல நடந்தாள்.

ஏழைக் கவிஞன் அவளை நிறுத்தி
எப்படி பிடிப்பேன் -- இந்த
பீழை உலகை விட்டு வானில்
எப்படி பறப்பேன்.

17 February 2010

கோதண் டமெனும் வில்லெங்கே?
...குலவும் புல்லாங் குழலெங்கே?
மோதும் வானர சேனையெங்கே?
...மோகங் கொள்கோ பியரெங்கே?
யாதும் வெல்லும் வீரமெங்கே?
...யாதவ ரிடைசெய் மாயமெங்கே?
ஓதும் மகிமை யெதும்மறைத்திங்
...குற்றதெ தற்கோ? ராமகிருஷ்ணா!....59.

தொல்லை ஏற்றும் தன்சேயின்
...துன்பம் துடைப்பார் தன்முலையில்
பல்லை ஏற்றும் பால்கொடுப்பாள்
...பாசம் கொண்ட நற்றாயும்
நெல்லை யகன்ற உமிபோல
...நின்னை யகன்ற எனக்குமருள்
இல்லை யென்னா தளிப்பாயோ?
...என் தா யேஸ்ரீ ராமகிருஷ்ணா!....60.

16 February 2010

யாரும் அருளார் எனத்தேர்ந்தே
...இறைவா உன்றன் அடிசேர்ந்தேன்
நீரும் என்னை வெறுத்துன்றன்
...நேசம் தாரா யெனின்,"இங்கே
பாரும்! பாரும்! அடியார்க்கும்
...பரியா பரம ஹம்ஸனிவன்!
யாரும் அறிவீர்!!" எனக்கூறி
...இரைவேன் அறிவாய் ராமக்ருஷ்ணா!....57.

அட்ட சித்திகள் பெற்றிருந்தும்
...அறியான் போல இருக்கின்றாய்!
முட்ட ஞானம் பலவறிந்தும்
...முட்டாள் போல நடிக்கின்றாய்!
பட்டத் துயரால் பதறுமனைப்
...பார்க்கத் திருவருள் மறுக்கின்றாய்!
பிட்ட மோதகப் பூரணமாய்ப்
...புசிப்போர்க் கினிக்கும் ராமக்ருஷ்ணா!....58.

15 February 2010

அருள்செய் இல்லா விடிலென்னை
...அழிந்தே போகச் செய்;சற்றும்
பொருள்செய் இல்லா விடிலென்னை
...பிணம்செய்; பிறக்கச் செய்கரிய
இருள்செய் மாயம் ஒழியிலையேல்
...இறக்கச் செய்வாய்; அசுரர்க்கும்
மருள்செய் பவதா ரிணிமகிழும்
...மைந்தா முத்து ராமக்ருஷ்ணா!....55.

சொல்லும் எந்தன் குறையெல்லாம்
...செவிகே ளாயோ என்செய்வேன்
அல்லும் பகலும் படுதுன்பம்
...அதைக்கண் பாரா யோஎன்முன்
கொல்லும் காலன் உருவன்றி
...குளிரும் உன்றன் உருவைநான்
செல்லும் நாளில் காண்பேனோ?
...செல்வா முத்து ராமக்ருஷ்ணா!.....56.

14 February 2010

மொழியின் செல்வந ரேந்திரனை
...முன்னே காணும் போதெல்லாம்
கழிப்பே றுவகைக் கொண்டாயே
...கமலக் கண்ணன் அவனில்லா
தொழிந்தால் ஒருநொடி யும்தாளா
...துயரால் உன்றன் இதயத்தைப்
பிழிந்தால் என்னத் துடித்தாயே
...பேலூர் வாசா ராமக்ருஷ்ணா!....53.

தன்னை மறந்து தரணிக்காய்த்
...தவங்கள் பலசெய் தவைகளெலாம்
என்னை எத்தன் மைத்தெனவே
...எவர்க்கும் தெரியும் படிஎளிதாய்
சொன்னை சொற்கள் அவையாவும்
...சொட்டும் தேனோ அமுதாமோ
அன்னைக் குழவிக் களிக்கும்முலை
...அதன்பா லாமோ ராமக்ருஷ்ணா!....54.

13 February 2010

வாடும் பிணியா ளரைக்கண்டும்
...வளைந்தே கூனிக் கோலொன்றை
நாடும் முதுமை நிலைக்கண்டும்
...நால்வர் மேலே பிணமாகக்
காடுக் கேகும் காட்சியினைக்
...கண்ட புத்தன் போலவுமே
பீடை யுலகை விட்டுன்னை
...போற்றுவ தென்றோ ராமக்ருஷ்ணா!....51.

கெட்டே தேகம் நோவாகிக்
...குலையக் கண்டும் அதன்பற்றை
விட்டேன் அல்லேன் விதவிதமாய்
...ஓம்பிடு தற்கே முயலுகிறேன்
முட்டா ளான நானென்றுன்
...முளறிப் பாதம் நாடுவெனோ
தட்டா திந்தத் தனியேனைத்
...தடுத்தாட் கொள்வாய் ராமக்ருஷ்ணா!....52.

2 February 2010

மலரே மலரே நீ வாழி!
மலரே மலரே நீ வாழி!..1.

கள்ளமும் கபடமும் உனக்கில்லை;
...கருத்து பூசலும் உனக்கில்லை;
உள்ளத்தை திறந்தே காட்டிடுவாய்!
...உன்னத மலரே நீ வாழி!.. 2.

நினைவில் ஜாதி பேதமில்லை;
...நிறபேதம் உன் நெஞ்சிலில்லை;
அனத்தும் படைத்தவன் மேனியிலே
...அணியும் கதம்பத்தில் அகமகிழ்வாய்!..3.

மரணத்தின் பயந்தான் உனக்கில்லை;
...மலியும் நோய்நொடி எதுமில்லை;
ஒருநாள் இனிதாய் உயிர்த்ததன்பின்
...ஓய்ந்திடும் மலரே நீ வாழி!.. 4.

பேர் புகழாசை உனக்கில்லை;
...பெருமையும் சிறுமையும் உனக்கில்லை;
யார் புகழ்வாரென எண்னாமல்
...எழிலுடன் அசையும் நீ வாழி!.. 5.

வாய்ச் சொல் ஏதும் இல்லாமல்;
...வளைக்கும் கரங்களும் இல்லாமல்;
தாய் போல் என்னைத் தழுவிடுவாய்
தண்மலர் பெண்ணே! நீ வாழி!.. 6.

கதிரவன் வந்தால் களித்திடுவாய்;
...காதலன் சுடுகரம் பட மலர்வாய்;
உதிரவும் துணிவாய் அவன் மறைந்தால்1
உண்மைக் காதலி நீ வாழி!.. 7.

மேடையும் பந்தலும் இல்லாமல்;
...மாலையும் செண்டும் இல்லாமல்;
ஜாடையி லேயே சன்மார்க்கம்
...சாற்றிடும் மலரே நீ வாழி!.. 8.

(சிவாம்ருதம்.25.8.1969.)

31 January 2010

(நஸ்ருல் இஸ்லாமின்மொழிபெயர்ப்பு.)

சொல்லுசொல்லு பயமறியா சுத்த வீரனே!
நில்லு,உயரத் தலையைத் தூக்கி நில்லு தீரனே!

மன்னுமிய மலையும்நிமிர்ந் தென்னைப் பார்த்தது!
மமதை நீங்கி முடியை தாழ்த்தி மண்ணைப் பார்த்தது!-என்று(சொல்லு)

விண்ணின் விரிவில் ஏறிஏறி வீரித் துளைத்தேன்
வெண்மதி கதிர் மின்மினிகளை விட்டும் உயர்ந்தேன்!-என்று(சொல்லு)

அம்புவியின் அமரருலகின் அளவை மீறினேன்!
ஆண்டவனா ருலகினையும் தாண்டி ஏறினேன்!-என்று(சொல்லு)

எம்பிரானும் வியர்ந்தயர்ந்தார்; என்நுதல் மேலே
ஈச்வரனே வெற்றிகுறி யென்ன ஜொலித்தார்!- என்று(சொல்லு)

29 January 2010

நஞ்சே நிறைகனி யதனைப்போய்
...நற்கனி யெனநினை அஞ்சுகத்தை
பஞ்சே தரும்காய் பழுக்குமென
...பசித்தே காக்கும் பறவையைப்போல்
அஞ்சே புலன் தரு ஆனந்தம்
...அருந்திக் காக்கும் அசடன்யான்
நெஞ்சே கனிய நீதரும் இன்
...அருள்கனி பெறவோ ராமக்ருஷ்ணா!....49.

கற்றே கலைகள் அறிந்தென்ன?
...காசை மலைபோல் குவித்தென்ன?
நற்றேன் மொழியார் அணைப்பிருந்தும்
...நலம்பல நிறைந்தும் பயனென்ன?
சற்றே வாழ்ந்து சருகாகிச்
...சாயும் உடலின் தன்மையினை
உற்றே நோக்கி உளம்நடுங்கி
...உனைச்சர ணடைந்தேன் ராமக்ருஷ்ணா!....50.

28 January 2010

பாழின் இருளோ படுகுழியோ?
...பஞ்சம் சூழ்ந்த பட்டிணமோ?
ஊழின் காலத் துண்டாகும்
...உலகின் நிலையோ புவிவாழ்வு?
யாழின் இசையும் இழிவாக
...இசைக்கும் நாமக தாதரனே!
தாழின் அருளால் தடுத்தாளும்
...தினமெத் தினமோ? ராமக்ருஷ்ணா!....47.

கொங்கை மாதர் கண்ணழகும்
...கொண்டை யழகும் குறுநகையின்
அங்கை யழகும் தொடையழகும்
...அழிக்கும் அழகாம் அழியழகாம்
கங்கைக் கரைபே லூரில் உறை
...கண்ணே உன்றன் கட்டழகும்
செங்கை அபயம் செய்யழகும்
...செழிக்கும் அழகாம் ராமக்ருஷ்ணா!....48.

27 January 2010

வேதா கமங்கள் சாத்திரங்கள்
...விள்ளுபு ராணங் கள் ஏதும்
ஓதா தவனோ ராதவன்யான்
...ஒன்றும் அறியா தவனானால்
காதால் நாவால் உன்னாமம்
...கேட்கச் சொல்ல இன்புறுவேன்!
போதா வோஇது புகல்வாயே
...போற்றிடு வோர்க்கருள் ராமக்ருஷ்ணா!....45.

திக்கும் தெரியா வனமேயோ?
...திசையொன் றறியா விரிகடலோ?
மக்கும் குப்பைக் கூளமதோ?
...மரணக் கிணறோ? மணற்காடோ?
ஒக்கும் வாழ்வில் வருந்தாமல்
...ஒண்தா மரையாம் உன்பாதம்
நக்கும் வண்டாய் நான்சுகிக்கும்
...நாளென் நாளோ? ராமக்ருஷ்ணா!....46.

26 January 2010

கும்பத் தனமே கோயிற்கருக்
...குழியே தெய்வம் எனஏங்கி
வெம்பத் தகுமோ விழலேனும்
...விரைகங் கைக்கரை சோலைசூழ்
உம்பர்ப் புகழும் பேலூரின்
...உயர்கோ புரமும் உள்ளுறையும்
அன்பர்க் கருளுன் னையும்கண்டே
...அகமகிழ் வேனோ ராமக்ருஷ்ணா!....43.

தைக்கும் விழியார் உறவிற்கும்
...தனத்தின் குவையைச் சேர்த்தற்கும்
கைக்கும் வாய்க்கும் உணவிற்கும்
...கவலைக் கொண்டு கடைசியிலே
பொய்க்கும் வாழ்க்கை இதுவென்று
...புலம்பும் படிக்குச் செய்யாமல்
மொய்க்கும் வண்டாய் உன்பாத
...மலருக்(கு) ஆக்கு ராமக்ருஷ்ணா!....44.

25 January 2010

சமயம் யாவும் ஒருவனையே
...சாறும் வகையைக் காட்டிடவே
அமையும் பலவாம் பாதைஎனும்
...அவ்வுண் மையிவ் வுலகுணர
குமையும் துன்பம் பலபட்டு
...கூறும் நெறிகள் பலகண்டாய்
தமையும் தன்பொருள் ஆவியையும்
...தரணிக் களித்த ராமக்ருஷ்ணா!....41.

நீரும் நிலமும் தீகாற்றும்
...நீளா காசம் இவைபிணைந்தே
நேரும் தேக பந்தத்தால்
...நானுன் உறவைப் பிரிந்துற்ற
பேரும் வடிவும் கொள்பேத
...பிரபஞ் சத்தை விட்டுன்னை
சேரும் படிசெய் வாயேசத்
...சித்தா நந்தா ராமக்ருஷ்ணா!....42.

24 January 2010

கல்மனம் உருகிடுமா?

ராகம்- காபி.
-----------

பல்லவி.
--------
கல்மனம் உருகிடுமா?-- எந்தன்
கதாதரா உந்தன் பதாரவிந்த மெண்ணி(கல்)

அனுபல்லவி.
-----------
சொல்மனம் செயலெல்லாம் சேர்ந்திடுமா?-- பரா
சக்தி மகனே உன்மேல் பக்தியேற்படுமா?(கல்)

சரணம்
-------
சாம முதல் வேதம் கற்றறியேனே!
சத்துவ குண நலம் அற்ற வெறியேனே!
தேமதுர சுவைசேர் ராமகிருஷ்ணா உன்பேர்
தினம்தினம் சொல்லிசொல்லி அனல்மெழு கெனவே என்(கல்)
-----------

23 January 2010

வாக்கால் மனத்தால் காயத்தால்
...வசையொன் றில்லா படிவாழ்ந்து
நாக்கால் எப்போ தும்உன்றன்
...நாமம் சொல்லும் இன்பத்தின்
தாக்கால் மயக்கம் கொள்ளவருள்
...தீரந ரேந்திர நாதனையும்
ராக்கால் தனையும் எமக்களித்த
...ராஸ மணிமகிழ் ராமக்ருஷ்ணா!....39

ஏடை எடுக்கா தறிவுற்றாய்
...எளிமை தன்னில் இன்புற்றாய்!
கூடை கூடை யெனஅருளால்
...கூறிச் சென்ற உன்னுரையாம்
வாடை மலரைத் தள்ளிகரு
...வாடாம் புன்மொழி நுகருமெனைக்
காடைச் சேர்முன் காப்பாயே!
...கருணைத் தேவே ராமக்ருஷ்ணா!....40.

22 January 2010

கஞ்ச மலரே நீயென்றால்
...கரிய வண்டே நானாகும்;
கொஞ்சும் அன்னை நீயென்றால்
...குலவும் குழந்தை நானாகும்;
விஞ்சும் மேகம் நீயென்றால்
...விளையும் பயிரே நானாகும்;
தஞ்சம் அளிப்போன் நீயென்றால்
...தாஸன் நானே ராமக்ருஷ்ணா!....37.

முலையுட் படுபால் தருதாயின்
...மேலாம் அன்பாம் நீவிரித்த
வலையுட் படுதல்; கொடுநாக
...வெங்கடி யுண்டார் பிழையாராம்;
சுளையுட் கொளுமோர் தீங்கனியின்
...சுவையே! பவதா ரிணித்தாயை
சிலையுட் பட்டெழச் செய்தவனே!
...சுகத்தின் உருவே!ராமக்ருஷ்ணா!....38.

21 January 2010

உண்டே நாவை வயிறதனை
...ஓம்பிடு வார்கள் என்னகண்டார்?
பெண்டே பொருளே என உழன்று
...பெறுமின் பத்தை பெருங்காயம்
கொண்டே கடலில் கலக்கினதாய்
...குறையச் செய்யும் பேரின்பம்
உண்டே உன்றன் அருளமுதை
...உண்டார்க் கெல்லாம் ராமக்ருஷ்ணா!....35.

சஞ்சித மோடா காமியத்தை
...சற்றுமி லாமல் களைந்திடலாம்
எஞ்சிடும் பிராரர்த் தம் அதனை
...எவரும் வெல்லல் ஆகாதென்(று)
அஞ்சிடு கின்றேன் அந்தோநான்
...அய்யா உன்றன் அடிகீழே
கெஞ்சிடு கின்றேன் கொடுமையதைக்
...குலைத்திடு வாயே ராமக்ருஷ்ணா!....36.

20 January 2010

பாலை வனத்தில் நீர்காணல்
...பசித்தோன் சுவைக்கும் பழம்காணல்
சாலை வெயிலிற் களைத்திட்டோன்
...சுகந்தரும் மரத்தின் நிழற்காணல்
வேலை யிடையே அலைபட்டோன்
...ஓடம் காணல் இச்சுகங்கள்
காலைப் பிடித்துனை வேண்டிடுவோர்
...காண்பா ரையா ராமக்ருஷ்ணா!....33.

உன்னடி யாரோ டிணங்கிடவும்
...உறங்கி யவரோ டெழுந்திடவும்
பன்னரும் உன்புகழ் பேசிடவும்
...பாடியும் ஆடியும் பரவிடவும்
தன்னைம றந்தே கண்ணீராய்
...தழுதழுத் திடநா குழறவுமென்
முன்னைய வர்புனி தம்பெறவே
...மகிழ்வே னோநான் ராமக்ருஷ்ணா!....34.

முன்னையவர்= ancestors

19 January 2010

கண்டீ ராநீர் கடவுளையே
...கண்ணால்? எனவே கேட்டநரேன்
பண்டோர் நாளில் அறியுவணம்
..."பார்த்தேன் பார்க்கின் றேன்பார்ப்பேன்
உண்டாம் இறைவன் அவனோடு
...உறவும் கொள்ளல் ஆகுமென
விண்டாய் உறுதி; இன்றெனக்கும்
...உரையாய் அதுபோல் ராமக்ருஷ்ணா!....31.

பொய்யேன் பக்தி நடிப்பென்று
...புவியில் உள்ளோர் அறியாமல்
மெய்யாய் உன்னைப் போற்றுகிறேன்
...மேலும் நீதான் எனக்கு அருள்
செய்யா திருப்ப தென்னவென
...சேர்ந்தே உன்னை ஏசுகிறார்
அய்யா அவர்கள் நாணிடவே
...அருள்செய் கண்டாய் ராமக்ருஷ்ணா!....32.

18 January 2010

கருணை செய் கதாதரா!

ராகம்:பாகேஸ்ரீ.

பல்லவி
-------
கஞ்சமலர்பதம் காட்டிடவே இன்னம்
கருணை செய்யாயோடா கதாதரா!

அனுபல்லவி
----------
பஞ்சுநிகர்ப் பதம் பாவிஎன் கல்நெஞ்சினில்
பதித்திடவே வா பரமஹம்ஸாவா(கஞ்ச)

சரணம்
--------
அன்னை சாரதா அணைத்த பதம் அல்லவோ
..அழகன் நரேந்திரன் அணிந்த பதம் அல்லவோ
சென்னை மடத்தில் சசி சேவித்தப் பதமல்லவோ
..சிறுவனெனக்கருள தினம்தினம் சொல்லவோ(கஞ்ச)
------ ------- * -------- --------
காசைக் காமம் தருசுகத்தை
...கருத்தில் சிறிதும் கொள்ளாமல்
தூசைப் போன்று தங்கமதைத்
...தொடவும் வெறுக்கும் இழிகுலத்து
வேசை யரையும் தேவியென
...வீழ்ந்தே பணியும் உனைப்போல
மாசை ஒழித்தார் மண்மேலும்
...விண்மே லுமிலை ராமக்ருஷ்ணா!....29.

பெண்ணின் பெருமை தனையுலகம்
...போற்றி யேத்தும் படியாக
அன்னைத் தூய சாரதையை
...ஆரா தித்துப் பணிந்தாயே!
எண்ணர்க் கரிய இச்செய்கை
...எவரே செய்ய வல்லார்கள்?
விண்ணின் நாட்டில் உள்ளவர்க்கும்
...வியப்பி துவாமே ராமக்ருஷ்ணா!....30.

17 January 2010

பஞ்ச வடியின் அடியிருந்து
...பகரொண் ணாத தவம்புரிந்தாய்!
எஞ்சும் படிக்கு ஏதுமிலா
...இறையின் காட்சி பலகண்டாய்!
மிஞ்சும் கொடுமை யதனாலே
...மேன்மைத் தாழும் உலகினுக்குத்
தஞ்சம் அளிக்க வெனத்தாளா
...தாயின் தயையால் ராமக்ருஷ்ணா!....27.

தாயின் அன்பைக் கடுகவின்
...தன்மை யாக்கும் உன்னன்பு
பேயின் தன்மைக் கொண்டவர்க்கும்
...பெருநெறி யளிக்கும் உன்னன்பு
சீயின் பாற்படு புழுவினையும்
...சேர அனைக்கும் உன்னன்பு
நாயின் பான்மைக் கொளெனையும்
...நயக்கும் அன்பா ராமக்ருஷ்ணா!....28.

16 January 2010

என்னை வளர்த்தல் தாயின்கடன்
...இசைவாய் காத்தல் தந்தைக்கடன்
பின்னைக் கல்வி போதித்தல்
...பேரா சிரியன் கடனாகும்!
முன்னை இவர்கள் செய்தகடன்
...முற்றும் பெற்றும் என்னபயன்?
உன்னைச் சாரும் கடனென்று
...நீஆ ளாக்கால் ராமக்ருஷ்ணா!....25.

மாயம் ஆகும் உலகென்றும்
...மனைவி மக்கள் பொய்யென்றும்
ஓயும் காலம் வரும்போது
...ஒருவரும் உதவார் எனத்தெரிந்தும்
தீயின் தழலைத் தலைக்கொண்டோன்
...துடித்தல் போலே உனைக்காண
நாயேன் துயரம் கொண்டறியேன்
...நாதா! அருள்ஸ்ரீ ராமக்ருஷ்ணா!....26.

15 January 2010

காளித் தாயின் பதம்பிடித்தாய்
...கண்ணன் மீதில் காதல்கொண்டாய்
தோளின் வலியுடை அனுமனெனத்
...தசரத ராமனைப் பூசித்தாய்!
நாள்,இடம் எனுமிவை நழுவியுயர்
...நான்மறை யுரைக்கும் நிலையுணர்ந்தாய்
தாளினில், கரத்தில் ஆப்புண்டோன்
தனை,நபி யையும்பணி ராமக்ருஷ்ணா!....23.

தங்கைத் தம்பித் தாய்தந்தை
...தமரும் மற்றை யுற்றவரும்
சங்கை யின்றி சந்தைநேர்
...சனத்தின் கூட்டம் கணக்கூட்டம்
மங்கைத் தூய சாரதையின்
...மணவா! உந்தன் அடியார்கள்
தங்கைக் கொட்டிப் புகழ்க்கூட்டம்
...திருக்கூட் டம்ஸ்ரீ ராமக்ருஷ்ணா!....24.

13 January 2010

அருள்கனித் தருவே!

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், சிவாம்ருதம் எழுதிய கீர்த்தனை விவேகானந்தர் பாதங்களில் சமர்ப்பிக்கப் படுகிறது!

பல்லவி.
---------
நாதா உன்புகழ் நவில்வோமே--எந்த
நாளும் விவேகா நந்த நரேந்திர(நாதா)

அனுபல்லவி.
-----------
மாதாசாரதா குரு மஹராஜர்புதல்வா
மருள்நீக்கும் உருவே! அருள்கனித் தருவே!(நாதா)

சரணம்-- 1.
------------
பாலப் பருவம் முதல் பரகதிக்(கு)உருகினாய்
...பரமஹம்ஸ மலர்ப் பாதத்தேன் பருகினாய்!
கோலகமலக் கண்கள் காட்டிஅவரைக் கொண்டாய்!
...குருசோதரர்களைக் கூட்டி சங்கம் கொண்டாய்!(நாதா)

சரணம்-2.
-----------
தனியே பாரதத் தரைமிசை நடந்தாய்!
...தயையால் உருகியுன் இதயமும் உடைந்தாய்!
முனியே கடல்தாண்டி மேற்றிசையும் அடைந்தாய்!
...மூளும் உன்கருணையில் யாரையும் கடந்தாய்!(நாதா)

சரணம்--3.
--------------
நடைமுறை வேதாந்தம் நாடெங்கும் உரைத்தாய்!
...நற்றேன்மொழி பகர்ந்தே நன்மை எங்கும்நிறைத்தாய்!
தடை பலவும் தவிர்த்தே தருமப் பயிர் வளர்த்தாய்!
...தவ யோகியர்க் கரசாய் தரணியை வலம் வந்தாய்!(நாதா)

சரணம்-4.
-----------
செயல் ஞானம் பக்தி பயில்யோகம்யாவும்
...சேர்ந்த திருவடிவே சுந்தரனே இங்கு
துயிலும் பாரதத்தைத் துடித்தெழச் செய்தவனே!
...துரியம் துறந்து எங்கள் துயர்த் துடைக்க வந்த(நாதா)

12 January 2010

அபிடேகம்:
------------------
தேன்கொண் டிளநீற் றினைகொண்டு
...தூய வெண்மை நிறங்கொண்ட
பான்கொண் டுள்ளம் குளிரச்செய்
...பன்னீர் பானகநீர் நந்நீர்
நான்கொண் டுந்தன் மேனியெலாம்
...நனையும் படிஅபிஷே கித்தேன்
வான்கொண் லலென அருள்பொழிவோய்!
...வந்தித் தேனுனை ராமக்ருஷ்ணா!....21.

நைவேத்தியம்:
---------------
பாலும் சருக்கரை நெய்யினையும்
...பதமாய்க் கலந்து பக்குவித்து
சாலும் இனிப்பின் வகையுணவும்
...சாதங் கல்பற் பலவகைகள்
மேலும் கனிகள் பானங்கள்
...மிகவே உந்தன் இசைவறிந்து
மூளும் அன்போ டளிக்கின்றேன்
...உண்டே அருளாய் ராமக்ருஷ்ணா!...22.
மலர்களால் அருச்சனை!
-------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

11 January 2010

சந்திர னின்குளி ரொளியும்நீ!
...சூரிய னின்வெங் கதிரும்நீ!
இந்திர போகத் தின்பம்நீ!
...ஏழையின் ஏக்கத் துன்பமும்நீ!
மந்திர வேதப் பொருளும்நீ!
...மழலை மொழியின் பொருளும்நீ!
தந்திரம் யாவும் செய்பவன்நீ!
...தனியேன் துணைநீ ராமக்ருஷ்ணா!....17.

நீராட்டல்!
===========
கங்கை நீரில் காவிரித்தாய்
...தரும்தண் ணீரில் நருமதையின்
பொங்கும் பிரம புத்திரையின்
...புனலில் வேறு புவியிலுள
தங்கும் புனிதம் உறுநதிகள்
...தரும்சலத் தாலே தலைவாஉன்
அங்கம் குளிர சொரிந்தேநீர்
...ஆட்டிம கிழ்வேன் ராமக்ருஷ்ணா!....18.

10 January 2010

கற்கும் கலைகளின் கருத்தாநீ!
...கருவின் உயிர்க்குக் காரணம்நீ!
சொற்கள் பலவின் பொருளும்நீ!
...சொல்லொண் ணாத பொருளும்நீ!
தெற்கும் வடக்கும் திசையெங்கும்
...திகழும் தேசோ மயமும்நீ!
பற்றொன் றில்லா பரமன்நீ!
...பாரின் முதல்நீ ராமக்ருஷ்ணா!....15.

மலரில் தேங்கும் மதுவும்நீ!
...மாந்திட மயங்கும் வண்டும்நீ!
புலரும் போதின் பகலவன்நீ!
...போதைப் பிரிக்கும் பதுமம்நீ!
அலறும் குழந்தை அதுவும்நீ!
...அணைக்கும் அன்னை அவளும்நீ!
சொலரும் சத்சித் சுகமும்நீ!
...சொலும்நான் மறைநீ ராமக்ருஷ்ணா!....16.

9 January 2010

காமிய பக்தி அன்றிஎதும்
...கருதா பக்தி செய்ததிலை
பூமியைப் பொன்னைப் புலனைந்தைப்
...பேணா திருக்கும் துறவில்லை
சேமித் திடுநற் கருமம்செய
...சிறியே .னுக்குச் சிந்தையிலை
சாமியென் றுனைச்சர ணடைவதலால்
...செயலொன் றில்லை ராமக்ருஷ்ணா!....13.

ஒருவன் இன்புற் றிருக்கத்துயர்
...ஒருவன் அடைந்து வருத்தமுற
ஒருவன் நீதான் காரணமென்
...றுரைப்பார் வசைபல மொழிந்திடுவார்
விருப்பால் வெருப்பால் வேற்றுமைசெய்
...வேந்தன் என உனை வருணிப்பார்
கருமம் மூன்றின் காரணத்தை
...கருதா தாரே ராமக்ருஷ்ணா!....14.

8 January 2010

(தொடர்ச்சி...)

எங்கே வில்லும் வேய்ங்குழலும்
...ஏற்றின் நடையும், இன்னிசையும்?
எங்கே தலைமேல் மணிமுடியும்
...எழில்செய் மயிலின் தோகையதும்?
எங்கே காதின் குண்டலங்கள்?
...இசைக்கும் மணியின் ஆரமெங்கே?
இங்கெ இவற்றை ஒளித்துவந்தாய்
...ஏனோ உரையாய் ராமக்ருஷ்ணா!....11.

நோயால் வாடும் எந்தனுக்கு
...நல்ல வைத்திய நாதன்நீ!
வாயால் உரைக்கும் உன்னாமம்
...வாய்த்த அம்மந் திரம்மருந்தாம்!
ஓயா துலகோர் தரும்மருந்தை
...உட்கொள் ளாது விடுத்தேனே
மாயா தேவீ சாரதையின்
...மணவா ளாஸ்ரீ ராமக்ருஷ்ணா!....12.

7 January 2010

என் சமயம்!

ஒருநாய் பசியால் உழலும்வரை
...உணவதற் களிப்பது என்சமயம்
உறுநோய் கொண்டே வாடுபவர்க்
...குதவிகள் புரிவது என்சமயம்
அறியா மையிருள் அகன்றிடவே
...அறிவொளி காட்டுதல் என்சமயம்
தரித்திர நாரா யணசேவை
...தான்புரிந் தின்புறல் என்சமயம்!

நீயது நீயது எனதினமும்
...நெஞ்சிற் குரைத்தல் என்சமயம்
தீயது தேகம் தனைச்சுடினும்
...திகையா திருப்பது என்சமயம்
சேயது வெனத்தாய் காளியிடம்
...சிந்தைம கிழ்தல் என்சமயம்
தீயது நல்லது எனவு ணரா
...திவ்விய நிலையுறல் என்சமயம்!

07-04-1969

6 January 2010

அருள் வாழ்வு !

ஆயிரம் தெய்வங்கள் உண்டு-- அந்த
...ஆயிரமாய்த் தோன்றும் ஒன்றதும் உண்டு
ஆயிரம் ஒன்றென்ப தெல்லாம்--அற்ற
...அந்தப்பெருநிலை என்பதும் உண்டு
வாயிலிதைச் சொல்லும் வேதம்--அதன்
...வாக்கதும் எச்சிலைப் போன்றதால் வீணே
வாயினால் போர்புரி யாமல்--அருள்
...வாழ்வினில் நின்றிடு வீருலகீரே!

(ராமகிருஷ்ணர்)

5 January 2010

வலிமை வேண்டும் !

வலிமை வேண்டும் வலிமை வேண்டும்
..வலிமை வேண்டும் வாழ்வெலாம்;
வலிமையுற்ற போது நீங்கும்
..வாழ்விலுற்ற தாழ்வெலாம்!

நிலத்தைக் காக்கும் வேந்தர்க்கும்
..வளத்தைக் காக்கும் உழவர்க்கும்
உளத்தைக் காக்கும் முனிவர்க்கும்
..குலத்தைக் காக்கும் மாதர்க்கும் (வலிமை)

தொண்டியற்று வோருக்கும்
..தொழிலி யற்று வோருக்கும்
பண்ணியற்று வோருக்கும்
..பகையகற்று வோருக்கும் (வலிமை)

வீணை தூக்கும் கையிலும்
..வில்லைத் தூக்கும் கையிலும்
பானைத் தூக்கும் கையிலும்
..பணியத் தூக்கும் கையிலும் (வலிமை)

துன்பம் நீக்க ஓடவும்
..தீமை களை சாடவும்
இன்பம் வேண்டி தேடவும்
..இறைவனையே நாடவும் (வலிமை)

சஞ்சலத்தை வெல்லவும்
..சாவினையே கொல்லவும்
துஞ்சுவதைத் தள்ளவும்
..தூய்மைக் காத்துக் கொள்ளவும் (வலிமை)

முத்தி இன்பம் தேக்கவும்
..மூட இன்பம் நீக்கவும்
சத்தியத்தைக் காக்கவும்
..சாந்திக் கொடியைத் தூக்கவும் (வலிமை)

4 January 2010

எழில் மாலை வேளை!

எத்தனை எத்தனை எழில்மாலை-- எங்கும்
...இன்பம் பொங்கவென்று வந்தவேளை--தத்தி
தத்திமலை வாயில்விழத் தங்கக் கதிரோனும் செல்லும்
...காட்சி என்ன மாட்சி!

மேலைத்திசை எங்கும் ரத்தச் சிகப்பு-- என்னை
...மேலும் மேலும் வந்துகவ்வும் திகைப்பு-- தென்னஞ்
சோலையும் பாளையும் மேயும் காளையும் பசுவும்-- அந்த
...வண்ணம் கொண்டு மின்னும்!

எத்தனை முறைகள் பார்த்திட் டாலும்-- இது
...என்றும் புதிதாகி யென்னை ஆளும்-- என்றன்
சித்தத்திற் குள்ளும் இக்காட்சி சென்றுபல வண்ணங்களைப்
...பூசும் காணக் கூசும்!

ஒவ்வொரு கணமும் வண்ணம் மாறும்--உடன்
...ஒவ்வொரு வித அழகு நேரும் --இந்த
செவ்வை மிகும் வானெழிலை சித்திரம் வரைய கையும்
...துடிக்கும் தோல்வி கிடைக்கும்!

சாவென் பதுவும் சஞ்சலமாம்
...சனனம் என்பது வும்துயராம்
யாவும் பிறப்பு இறப்பென்னும்
...இருமை வெல்லல் ஆகாது
நாவும் நெஞ்சும் நிறைவாக
...நாதன் உன்றன் நாமத்தை
கூவும் அடியா ரால்மட்டும்
...கூடும் வெல்லல் ராமக்ருஷ்ணா!....9.

பொருப்பின் மேலே உறைவோரும்
...புதர்க்கொள் வனத்தில் வசிப்போரும்
நெருப்பை நீரை ஒன்றெனவே
...நினைத்துத் தவங்கள் புரிந்தெதிலும்
விருப்பை வெறுப்பை அழித்தவரும்
...விழியால் உன்னைக் காணாருன்
சிறப்பைப் போற்றும் அடியாரே
...சிறக்கக் காண்பார் ராமக்ருஷ்ணா!....10.

3 January 2010

சத்தியப் பாதைச் செல்வோர்கள்
...ஜயமே அடைவார் தோல்வியுறார்
நித்திய வாழ்வைப் பெற அதுவே
...நேர்வழி என்வே வேதங்கள்
ஒத்தியம் பிடுதல் அறிந்தாலும்
...ஒன்றும் புரிய அறியேனே!
அத்தகை வாழ்க்கை வாழ்ந்திடவே
...அடியே நுக்கருள் ராமக்ருஷ்ணா!....7.

பிரமச் சரிய நன்னெறியை
...பத்தீ ராண்டும் மேற்கொண்டால்
பிரம ஞானம் அடைந்திடுதல்
...பிறகே எளிதாம் என உரைத்தாய்
பிரமன் படைத்த பெண்ணினத்தை
...பரதே வியெனப் போற்றவருள்
பிரமன் என்ற நிலைமாறி
...பிறந்திங் குற்ற ராமக்ருஷ்ணா!....8.

பி.கு. 7 --ஆம் பாடலில்,மூன்றாவது அடியின் ஐந்தாம் சீரில் 'புரிய' என்னும் சொல்லுக்கு,--'ட்டு டு ப்ராக்டிகலி' என்று ஆங்கிலத்தில் அமரர் சிவாமிருதம் குறிப்பு கொடுத்துள்ளார்.

2 January 2010


புளியின் சுவையும் காரத்தின்
...புன்மைச் சுவையும் தீஞ்சுவையும்
களித்தே இவ்வேழ் சுவையருந்திக்
...கடையேன் நாவை வளர்ப்பதலால்
வெளியும் உள்ளும் நிறைந்தவனே
...விமலா! உலகை உண்டாக்கி
அளிப்போய் அழிப்போய் எனநாவில்
...அரற்றிச் சுவைக்கேன் ராமக்ருஷ்ணா!....5.

அன்பால் உலகை ஆண்டவனே!
...ஆண்பால் பெண்பால் பலவின்பால்
துன்பால் எவையும் வாடிடவும்
...துடைக்க தாவும் கருணையினால்
என்பால் தசையால் உயிரதனால்
...எவர்க்கும் உடைமை ஆகினையே!
பொன்பால் பெண்பால் போயுழலும்
...புலையேன் எனையாள் ராமக்ருஷ்ணா!....6.

1 January 2010


வயிற்றில் சுமந்தாள் என்னன்னை
...வயதில் சுமந்தான் என்னப்பன்
பயிற்றும் ஆசான் நான்கல்வி
...பயிலும் போது எனைசுமந்தான்
தயிற்றில் வெண்ணெய் போன்றவனே
...தாயும் தந்தை குருவன்றி
உயிற்றின் முதல்வா எனைச்சுமக்கும்
...ஒருதெய் வமுநீ ராமக்ருஷ்ணா!....3

படிக்க இனிக்கும் உன்சரிதம்
...பார்க்க இனிக்கும் உன்னுருவம்
பிடிக்க இனிக்கும் உன்பாதம்
...பிதற்ற இனிக்கும் உன்னாமம்
நடிக்க இனிக்கும் உன்னிடத்தில்
...நயக்கும் பக்தன் போலவுமே
கடிக்க இனிக்கும் கரும்பெனவே
...கருத இனிக்கும் ராமக்ருஷ்ணா!....4

31 December 2009

அமுதப் பாடல்கள்!உள்ளம் குழைய ஊனுருக
...உன்னா மத்தை மிகச்சொல்லி
வெள்ளம் என உன் னிடமன்பு
...வெறிபோற் கொள்ளா துலகத்தில்
கள்ளம் கொண்ட மனவாக்கு
...காயம் இவற்றால் கடுநரகப்
பள்ளம் விழுவேன் தனைக்காப்பாய்
...பரம ஹம்ஸ ராமக்ருஷ்ணா!....1.

அழுதேன் பலகால் உன்முன்னே
...அரசே நீயும் அறியாயா?
தொழுதேன் உன்னைத் தொண்டன்யான்
...துரையே நீயும் தெரியாயா?
மொழிந்தேன் குறையை தீந்தமிழில்
...மணியே உனக்குப் புரியாதா?
விழலேன் வேறு என்செய்வேன்
...விள்ளாய் முத்து ராமக்ருஷ்ணா!....2.

30 December 2009

பகவானைப் பணி மனமே!
ராகம்-சரஸ்வதி தாளம்-ரூபகம்.

பல்லவி
========

பகவானைப் பணி மனமே!
பரமஹம்ஸ ராமகிருஷ்ண (பக)

அனுபல்லவி
===========

சுகவாழ் வுற்றிடவே சத்
..சிதானந்த ஸ்வரூபனை (பக)

சரணம்
========

தூய அன்னை நேயனைஅன்பர்த்
..துயர் நீக்கும்ச காயனை
மாயனை குரு மஹராஜனை
..மஹாதேவ கதாதரனை (பக)

நம்பினேன் அருள்செய் நாயகனே !


ராகம்-திலங் தாளம்- ஆதி

பல்லவி
=======

நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)

அனுபல்லவி
==========

அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)

சரணம்
======

வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)

பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!


தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!