Visitors

26 February 2010

தூய அன்னைத் துணைவா வா
...தோன்றித் தோன்றா ஒன்றே வா
நேயம் காட்டும் நண்பா வா
...நிலையில் உலகின் நிலையே வா
மாயப் பிணிக்கோர் மருந்தே வா
...மருந்தைக் குழைக்கும் தேனே வா
நாயே னுக்கெஜ மானே வா
...நயப்போர்க் கருளும் ராமக்ருஷ்ணா!....61.

தாகம் தவிர்க்கும் தலைவா வா
...தனியே னெனக்குத் துணையே வா
சோகம் தவிர்க்கும் சுகமே வா
...சூதை யொழிக்கும் சுகிர்தா வா
போகம் கொடுக்கும் புனிதா வா
...பிறப்பை யறுக்கும் பெயரா வா
தேகம் கொண்டே தோன்றிட வா
...தேவா வாவா! ராமக்ருஷ்ணா!....62.

24 February 2010

மூவகை அடியார்

படுத்திருந்தாள் ரபியாளும் நோயால்வாடி
...பார்த்துசெல அவளருகில் இருவர்வந்தார்
அடுத்தமுசல் மான்கள்புகழ் புனிதமாலிக்
...அறிவாளர் ஹாஸனென்ப தவர்கள் பேராம்.

"இறையவனார் தருந்துன்பம் எதுவா.னாலும்
...ஏற்றுமனம் பொறுத்தநலம் "என்றார்ஹாஸன்
"பொறையதிலும் அழகாகும் அடியாரென்றால்
...புன்மைகண்டும் புன்னகைத்தல்" என்றார்மாலிக்.

பின்னவரின் பக்தியிலும் அகந்தைக்கண்டு
...பெண்ரபியாள் "பெரியோரே! நீங்கள்சொன்ன
அன்னவர்க்கும் மேலானோர் அவனைக்கண்டு
...அடைந்ததுயர் மறந்துநிற்கும் அடியார்"என்றாள்.

19 February 2010

"மதங்கள் எத்தனை மார்க்கம் அத்தனை"-- ராமகிருஷ்ணர்.

"சோத்துக் கவலை தீராமல் சொர்க்கக் கவலை வாராது."--விவேகானந்தர்.

"if the BHDDHA is the evolved amoeba
the amoeba was the involved BUDDHA also"--- VIVEKANANDHA.

"முதிர்ந்த புழுவே புத்தன் எனில்
முதிரா புத்தன் புழுவாகும்"

சிவாம்ருதம்.
18-1-69

"A cloud of clay desires to be a flower;
A flower, to reach a star;
A star, to flame the soul of man;
A man, to turn Creator;
But the dream of GOD is to become a clod"
-- R.K.DALAL.

"விருப்பச் சுழல்'
----------------
மண்ணாங்கட்டி விரும்பியது
..மனக்கும் மலராய் இதழ்விரிக்க
மணக்கும் மலரோ விரும்பியது
...வானில் மீனாய்க் கண்சிமிட்ட
வானின் மீனும் விரும்பியது
...மனிதனுள் ஆன்மத் தீயாக
மனிதனின் ஆன்மா விரும்பியது
...பரமாத்மாவாய் பரிமளிக்க
பரமாத்மாவின் விருப்பமதோ
...மறுபடி ஒருபிடி மண்ணாக!

சிவாம்ருதம்,
26.7.69.

18 February 2010

நிலவு சுந்தரி நடந்தாள்...

நிலவு சுந்தரி நடந்தாள்...

ஜோதி நிலவு சுந்தரி--வான்
வீதியில் நடந்தாள்-- என்னிடம்
பாதி உயிரைப் பறித்துக் கொண்டு
பாவை நடந்தாள்.

மேகக் காட்டில் மறைந்து மறைந்து
மெல்ல நடந்தாள்-- உளம்
வேகும் என்னை தனியில் விட்டு
விண்ணில் நடந்தாள்.

இருண்ட வானில் துணையின்றி--மார்பு
இரைக்க நடந்தாள்--பயந்து
வெருண்ட மானைப் போல திகைத்து
வெண்மதி நடந்தாள்.

ஜொலிக்கும் விண்மீன் தோட்டத்தின் வழி
சோகமாய் நடந்தாள்-- காதல்
களிப்பைத் துறந்து ககனவெளியில்
கலைமதி நடந்தாள்.

தந்தை சூர்யன் தகிப்பை அஞ்சி
தண்மதி நடந்தாள்-பிறர்
நிந்தைக் காக பயந்து--என்னை
நீங்கி நடந்தாள்.

திரும்பி திரும்பிப் பார்த்து-- சந்திர
தேவி நடந்தாள்--தேன்
சுரும்பு மொய்க்கும் மலர்முகம்--கதை
சொல்ல நடந்தாள்.

ஏழைக் கவிஞன் அவளை நிறுத்தி
எப்படி பிடிப்பேன் -- இந்த
பீழை உலகை விட்டு வானில்
எப்படி பறப்பேன்.

17 February 2010

கோதண் டமெனும் வில்லெங்கே?
...குலவும் புல்லாங் குழலெங்கே?
மோதும் வானர சேனையெங்கே?
...மோகங் கொள்கோ பியரெங்கே?
யாதும் வெல்லும் வீரமெங்கே?
...யாதவ ரிடைசெய் மாயமெங்கே?
ஓதும் மகிமை யெதும்மறைத்திங்
...குற்றதெ தற்கோ? ராமகிருஷ்ணா!....59.

தொல்லை ஏற்றும் தன்சேயின்
...துன்பம் துடைப்பார் தன்முலையில்
பல்லை ஏற்றும் பால்கொடுப்பாள்
...பாசம் கொண்ட நற்றாயும்
நெல்லை யகன்ற உமிபோல
...நின்னை யகன்ற எனக்குமருள்
இல்லை யென்னா தளிப்பாயோ?
...என் தா யேஸ்ரீ ராமகிருஷ்ணா!....60.

16 February 2010

யாரும் அருளார் எனத்தேர்ந்தே
...இறைவா உன்றன் அடிசேர்ந்தேன்
நீரும் என்னை வெறுத்துன்றன்
...நேசம் தாரா யெனின்,"இங்கே
பாரும்! பாரும்! அடியார்க்கும்
...பரியா பரம ஹம்ஸனிவன்!
யாரும் அறிவீர்!!" எனக்கூறி
...இரைவேன் அறிவாய் ராமக்ருஷ்ணா!....57.

அட்ட சித்திகள் பெற்றிருந்தும்
...அறியான் போல இருக்கின்றாய்!
முட்ட ஞானம் பலவறிந்தும்
...முட்டாள் போல நடிக்கின்றாய்!
பட்டத் துயரால் பதறுமனைப்
...பார்க்கத் திருவருள் மறுக்கின்றாய்!
பிட்ட மோதகப் பூரணமாய்ப்
...புசிப்போர்க் கினிக்கும் ராமக்ருஷ்ணா!....58.

15 February 2010

அருள்செய் இல்லா விடிலென்னை
...அழிந்தே போகச் செய்;சற்றும்
பொருள்செய் இல்லா விடிலென்னை
...பிணம்செய்; பிறக்கச் செய்கரிய
இருள்செய் மாயம் ஒழியிலையேல்
...இறக்கச் செய்வாய்; அசுரர்க்கும்
மருள்செய் பவதா ரிணிமகிழும்
...மைந்தா முத்து ராமக்ருஷ்ணா!....55.

சொல்லும் எந்தன் குறையெல்லாம்
...செவிகே ளாயோ என்செய்வேன்
அல்லும் பகலும் படுதுன்பம்
...அதைக்கண் பாரா யோஎன்முன்
கொல்லும் காலன் உருவன்றி
...குளிரும் உன்றன் உருவைநான்
செல்லும் நாளில் காண்பேனோ?
...செல்வா முத்து ராமக்ருஷ்ணா!.....56.

14 February 2010

மொழியின் செல்வந ரேந்திரனை
...முன்னே காணும் போதெல்லாம்
கழிப்பே றுவகைக் கொண்டாயே
...கமலக் கண்ணன் அவனில்லா
தொழிந்தால் ஒருநொடி யும்தாளா
...துயரால் உன்றன் இதயத்தைப்
பிழிந்தால் என்னத் துடித்தாயே
...பேலூர் வாசா ராமக்ருஷ்ணா!....53.

தன்னை மறந்து தரணிக்காய்த்
...தவங்கள் பலசெய் தவைகளெலாம்
என்னை எத்தன் மைத்தெனவே
...எவர்க்கும் தெரியும் படிஎளிதாய்
சொன்னை சொற்கள் அவையாவும்
...சொட்டும் தேனோ அமுதாமோ
அன்னைக் குழவிக் களிக்கும்முலை
...அதன்பா லாமோ ராமக்ருஷ்ணா!....54.

13 February 2010

வாடும் பிணியா ளரைக்கண்டும்
...வளைந்தே கூனிக் கோலொன்றை
நாடும் முதுமை நிலைக்கண்டும்
...நால்வர் மேலே பிணமாகக்
காடுக் கேகும் காட்சியினைக்
...கண்ட புத்தன் போலவுமே
பீடை யுலகை விட்டுன்னை
...போற்றுவ தென்றோ ராமக்ருஷ்ணா!....51.

கெட்டே தேகம் நோவாகிக்
...குலையக் கண்டும் அதன்பற்றை
விட்டேன் அல்லேன் விதவிதமாய்
...ஓம்பிடு தற்கே முயலுகிறேன்
முட்டா ளான நானென்றுன்
...முளறிப் பாதம் நாடுவெனோ
தட்டா திந்தத் தனியேனைத்
...தடுத்தாட் கொள்வாய் ராமக்ருஷ்ணா!....52.

2 February 2010

மலரே மலரே நீ வாழி!
மலரே மலரே நீ வாழி!..1.

கள்ளமும் கபடமும் உனக்கில்லை;
...கருத்து பூசலும் உனக்கில்லை;
உள்ளத்தை திறந்தே காட்டிடுவாய்!
...உன்னத மலரே நீ வாழி!.. 2.

நினைவில் ஜாதி பேதமில்லை;
...நிறபேதம் உன் நெஞ்சிலில்லை;
அனத்தும் படைத்தவன் மேனியிலே
...அணியும் கதம்பத்தில் அகமகிழ்வாய்!..3.

மரணத்தின் பயந்தான் உனக்கில்லை;
...மலியும் நோய்நொடி எதுமில்லை;
ஒருநாள் இனிதாய் உயிர்த்ததன்பின்
...ஓய்ந்திடும் மலரே நீ வாழி!.. 4.

பேர் புகழாசை உனக்கில்லை;
...பெருமையும் சிறுமையும் உனக்கில்லை;
யார் புகழ்வாரென எண்னாமல்
...எழிலுடன் அசையும் நீ வாழி!.. 5.

வாய்ச் சொல் ஏதும் இல்லாமல்;
...வளைக்கும் கரங்களும் இல்லாமல்;
தாய் போல் என்னைத் தழுவிடுவாய்
தண்மலர் பெண்ணே! நீ வாழி!.. 6.

கதிரவன் வந்தால் களித்திடுவாய்;
...காதலன் சுடுகரம் பட மலர்வாய்;
உதிரவும் துணிவாய் அவன் மறைந்தால்1
உண்மைக் காதலி நீ வாழி!.. 7.

மேடையும் பந்தலும் இல்லாமல்;
...மாலையும் செண்டும் இல்லாமல்;
ஜாடையி லேயே சன்மார்க்கம்
...சாற்றிடும் மலரே நீ வாழி!.. 8.

(சிவாம்ருதம்.25.8.1969.)