Visitors

18 February 2011

புலன் வெறுத்தல்!

புலன் வெறுத்தல்
---------------
நாவு.
======
உண்நாக்கு சுவையறியா தன்மைபோல் எழுசுவையும்
உண்ணுவதே தொழிலாகக் கொண்டதலால்-- கண்ணாளா!
காவலனே ராமக்ருஷ்ணா! உன்நாம மதன்சுவையை
நாவறியா தென்னே இது?

கண்
====
காசுக்கும் உதவாத காட்சியையும் கணிகையரின்
வீசுவிழி கண்டுள்ளம் களிப்பதலால்-- தேசுநிறை
விண்ணவனே ராமக்ருஷ்ணா! உனைக்காணும் அதன்சுவையைக்
கண்ணறியா தென்னே இது?

செவி.
======
அரட்டையினைக் கேட்பதற்கு ஆர்வமிகக் கொண்டு
புரட்டுரைக்கு பேதலிப்ப தல்லா(து)-- இரட்சகனே
நவின்றிடுவோர் பிறப்பறுக்கும் ராமக்ருஷ்ண நாமம்
செவியறியா தென்னே இது?
நாசி.
======
தேகத்தின் மேற்பூசும் தைலமதும் தையலரின்
மேகத்தை நிகர்கூந்தல் முகர்தலாந்- ஏகனே
பூக்கொடுனை பூசித்து ராமக்ருஷ்ணா! தூபமணம்
மூக்கறியா தென்னே இது?
மெய்
====
வெய்யில் மிகப்பட்டால் நிழல்நாடிப் பொய்யின்ப
மொய்குழலாள் மேனிசுகம் கொள்வதலால்-- மெய்ய உன்
னிடமன்பு மிகக்கொண்டு ராமக்ருஷ்ணா வென உருக
உடலறியா தென்னே இது?

நெஞ்சம்.
========
விடயங்கள் பற்பலவும் வேட்பதுவும் அவற்றோடு
படையென்ன போர்புரிவ தல்லாமல்-- உடையவனே
கஞ்சமலர் இதயத்தில் ராமக்ருஷ்ணா உனைவைக்க
னெஞ்சறியா தென்னே இது?

2 comments:

  1. வெண்பா போல் தோற்றமளித்தாலும் பல இடங்களில் தளை தட்டியுள்ளது!!!

    ReplyDelete
  2. அன்புள்ள அருண்,
    பேராசிரியர் திரு.பசுபதி அவர்களின்'கவிதை இயற்றிக் கலக்கு'
    என்னும் நூலிலிருந்து:

    வெண்டளையும், கலித்தளை ( காயைத் தொடர்ந்து நிரை) யும் விரவிவந்த நான்கு சீரடிகளைப் பெற்று, ஈற்றடி மூன்று சீர்களைப் பெற்றிருந்தால் அது வெண்கலிப்பா ஆகும். நான்கு அடிகளுக்கு
    மேல் எவ்வளவு அடிகளும் வரலாம். பெரும்பாலும் காய்ச்சீரடிகளைப் பயன்படுத்தி, இரண்டு இரண்டு அடிகளுக்கு ஓர் எதுகை வைப்பது வழக்கம். சிறுபான்மை நிரையொன்றாசிரியத் தளை வரலாம். (எல்லாம் காய்ச்சீர்களாக இருந்தால் தளையைப்பற்றி யோசிக்க வேண்டியதில்லை.)

    ReplyDelete